கையில் பணக்கட்டுடன் வாக்காளர்களை சந்திப்பதற்கு பெயர் தான் மாற்றமா? -முதலமைச்சர் விஜய்க்கு வினோஜ் பி செல்வம் கேள்வி
சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.) மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறும் நிலையில், வாக்கு எண்ணிக்கையானது அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறுகிறது. தவெக சார்பில் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும்,
Vinoj P Selvam


சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.)

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறும் நிலையில், வாக்கு எண்ணிக்கையானது அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறுகிறது.

தவெக சார்பில் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் பி. சத்யபாமாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.

திமுக சார்பில் மதுராந்தகத்தில் ஐ. பரந்தாமனும், தாராபுரத்தில் எஸ். சுகன்யாவும் வேட்பாளர்களாக அறிவித்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அதிமுக சார்பில் கணிதா சம்பத்தும், கே. பானுமதியும் வேட்பாளர்களாக உள்ளனர். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களாக மதுராந்தகம் தொகுதியில், கோ. ஜானகிராமன் என்பவரும், தாராபுரம் தொகுதியில், மு. கார்த்திகா என்பவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டார்கள்.

பிரச்சார பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வீடியோ ஒன்றை பகிர்ந்து பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் தனது எக்ஸ் தளத்தில்,

தூய சக்தி என்று நெற்றியில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு, கையில் பணக்கட்டுடன் சென்று வாக்காளர்களை சந்திப்பதற்கு பெயர் தான் மாற்றமா முதல்வர் விஜய் அவர்களே?

தீபாவளி செலவிற்கு பணம் வருகிறது வாங்கிக் கொள்ளுங்கள் என்று பிரச்சாரத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதன் அர்த்தம் இப்போது புரிகிறது.

திமுகவை தீய சக்தி என்று கூறிவிட்டு, இடைத்தேர்தலில் வெற்றி பெற திமுக கடைபிடிக்கும் அதே பார்முலாவை தவெக பின்பற்றுகிறது.

ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள இடைத்தேர்தல் வெற்றி மிக முக்கியமானது என்ற ரீதியில் ஜனநாயகத்தை அழித்து ஒழிக்கும் எல்லா முயற்சிகளையும் தவெக முன்னெடுக்கிறது.

மக்கள்தான் விழித்துக் கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN