Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.)
சொத்து வரி உயர்வு தொடர்பான வழக்குகளில் மாநகராட்சிகள் சார்பில் வழக்கறிஞர்கள் முறையாக ஆஜராகாத நிலையில், சென்னை, கோவை, ஈரோடு மாநகராட்சி ஆணையர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சொத்து வரி உயர்வு தொடர்பாக பல்வேறு மாநகராட்சிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகளில் மாநகராட்சிகள் சார்பில் பதில் மனு தாக்கல் செய்து விளக்கம் அளிக்க நீதிமன்றம் பலமுறை அவகாசம் வழங்கியதாக கூறப்படுகிறது.
இருப்பினும், வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது மாநகராட்சிகள் சார்பில் முறையாக யாரும் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த சென்னை உயர்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மாநகராட்சி ஆணையர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஈரோடு மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் ஆகியோர் வரும் 29-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும், கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வரும் 30-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ