Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.)
பிரச்சனை கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜூன் 19 அன்று தமிழக சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அந்த விவாதத்தின் முடிவில், நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற ஒரு புதிய திருத்தம் அதில் கோரப்பட்டது.
இந்தத் திருத்தம் சட்டப்பேரவை விதிகளின்படி விவாதிக்கப்படாமல், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது போல் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறி, அதை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை எதிர்த்து அதிமுக கொறடாவான அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தீர்மானத்தின் நகலில் இடம்பெறாத ஒரு திருத்தத்தின் மீது எந்தவித விவாதமும் நடத்தப்படாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த தமிழக அரசு தரப்பில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பது சட்டமன்றத்தின் ஒட்டுமொத்த முடிவாகவே கருதப்பட வேண்டும் என்றும், அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என்றும் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், சட்டமன்ற நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதை சுட்டிக்காட்டி, அதிமுக கொறடா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.
Hindusthan Samachar / vidya.b