Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 23 செப்டம்பர் (ஹி.ச.)
கடலூர் மாநகராட்சியில் சுமார் 45 வார்டுகளில் மழைநீர் வடிகால் வாய்க்கால்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என புகார் தெரிவித்து, மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா தலைமையில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளிக்க சென்றனர்.
அப்போது மாநகராட்சி ஆணையர் முறையாக பதிலளிக்காமல், மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களை தரக்குறைவாக பேசியதாக புகார் எழுந்துள்ளது. மேலும், கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டப் பணிகளுக்கு முறையாக நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் மாமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.
தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு செய்தபோது,
நீங்கள் ஆய்வு செய்வதற்கு யார்? என மாநகராட்சி ஆணையர் கேட்டதாகவும், இதுகுறித்து கேள்வி கேட்கச் சென்ற தங்களை தரக்குறைவாக பேசியதாகவும் கூறி, மாநகராட்சி அலுவலகம் முன்பு திமுக மாமன்ற உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ஆணையர் அலுவலகம் முன்பு சென்று கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து பாதுகாப்புப் பணியில் இருந்த கடலூர் நகர துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ் இனியன் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மாமன்ற உறுப்பினர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதனால் கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Hindusthan Samachar / GOKILA arumugam