Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.)
வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் அலைகளின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, மேற்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இந்த அமைப்பு கடந்த சில மணி நேரமாக மணிக்கு சுமார் 7 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகர்வதால் காற்றின் வேகம் கணிசமாக அதிகரித்துள்ளது.
இன்று (செப்டம்பர் 23ம் தேதி) இரவு முதல் நாளை அதிகாலைக்குள் விசாகப்பட்டினத்திற்கும் கோபால்பூருக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b