மணப்பாறை அருகே மான் தோல்கள், சந்தனக் கட்டைகள் பறிமுதல் - இருவர் கைது, முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு
திருச்சி, 23 செப்டம்பர் (ஹி.ச.) திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வளநாடு பகுதியில் வனவிலங்குகளின் தோல்கள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட சந்தனக் கட்டைகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலி
மணப்பாறை அருகே மான் தோல்கள், சந்தனக் கட்டைகள் பறிமுதல் - இருவர் கைது, முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு


திருச்சி, 23 செப்டம்பர் (ஹி.ச.)

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வளநாடு பகுதியில் வனவிலங்குகளின் தோல்கள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட சந்தனக் கட்டைகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் வனச்சரக அலுவலர் தலைமையிலான வனத்துறை குழுவினர் நேற்று இரவு அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

சந்தேகத்திற்கிடமான வீடு ஒன்றில் சோதனை மேற்கொண்ட போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு மான் தோல்கள் மற்றும் சுமார் 14 சந்தனக் கட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மத்திய வன விலங்கு குற்ற தடுப்பு பிரிவு குழுவினர் மான்தோல் வாங்குவதை போல் பேரம் பேசி ஒரு தோல் ஒரு லட்ச ரூபாய் என்று கூறியதன் பேரில் இரண்டு தோள்களை வைத்திருந்த கேரளாவை சேர்ந்த ரமேஷ் (60) மற்றும் கலிங்கப்பட்டியைச் சேர்ந்த அழகர்(43) ஆகிய இருவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

இதில் சம்பந்தப்பட்ட பாலக்குறிச்சி அருகே உள்ள சொக்கம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி (60), கருமலையான் பட்டியைச் சேர்ந்த துரைசாமி (27) ஆகிய இருவரில் துரைச்சாமி தலைமறைவானார். பழனிச்சாமி உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துவிட்டு, பிடிபட்ட ரமேஷ், அழகர் இருவரையும் தொடர் விசாரணை செய்தனர்.

அப்போது, அவர்களிடம் இருந்து சுமார் 14 சந்தன கட்டைகள் வெட்டி விற்பதற்கு வைத்திருப்பதாக கூறிய நிலையில், அந்த சந்தன கட்டைகளையும் பறிமுதல் செய்து மணப்பாறை வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

இதில் பிடிபட்ட இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து இரண்டு மான் தோல்கள் மற்றும் 14 சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

போலீசார் விசாரணையில் இந்த கடத்தல் சம்பவத்தின் முக்கிய நபர் துரைசாமி என்பது தெரியவந்துள்ளது. அவர் தலைமறைவாகியுள்ள நிலையில், வனத்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மான் தோல்கள் மற்றும் சந்தனக் கட்டைகளின் மதிப்பு குறித்து வனத்துறையினர் மதிப்பீடு செய்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Hindusthan Samachar / vidya.b