Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் 301 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இந்த ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை தமிழகத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17,649 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களாக பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கொசுக்கள் உற்பத்தி அதிகரித்ததே இந்த பாதிப்பு அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
அதேபோல், உண்ணிகள் மூலம் பரவும் ஸ்க்ரப் டைபஸ் எனப்படும் உண்ணிக் காய்ச்சல் பாதிப்பும் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 4,653 பேருக்கு உண்ணிக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர், சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் முன்னிலையில் உள்ளன. இதனை கட்டுப்படுத்த சுகாதார மாவட்ட வாரியாக ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமித்து கொசு ஒழிப்பு பணிகள், மருத்துவ முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் தங்கள் வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும், காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b