Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.)
நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
‘ஆகாஷ் காஸ்ட்யூம்ஸ்’ என்ற பெயரில் விளம்பரம் வெளியிட்டு, தாய்லாந்தில் நடைபெற்று வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிக்க வாய்ப்பு வழங்கப்படுவதாக சிலரிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், திரைப்படத்தில் நடிப்பதற்கான நடிகர் அட்டை பெற ரூ.12,500 செலுத்த வேண்டும் என்றும், அவ்வாறு பணம் செலுத்தினால் படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கப்படுவதுடன், ரூ.18.50 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் என்றும் கூறியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நம்பி பலர் பணம் செலுத்தியதாகவும், பின்னர் அவர்கள் ஏமாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, ‘தர்மன்’ படக்குழுவின் பெயரை பயன்படுத்தி இதுபோன்ற மோசடி நடைபெறுவதாகக் கூறி, நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகர் கமல்ஹாசனின் உதவியாளர் முரளி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ‘ஆகாஷ் காஸ்ட்யூம்ஸ்’ பெயரில் விளம்பரம் செய்தவர்கள் யார், இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார், எத்தனை பேரிடம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ