மின்வாரிய அலுவலகம் அருகே போராடிய ஊழியர்களை முதலமைச்சர் சந்திக்காதது ஏன்? - டிடிவி தினகரன் கேள்வி
சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.) தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வரும் நிலையில், மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அதே அலுவலகத்தின் அருகே காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், தமிழ்ந
டிடிவி தினகரன்


சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வரும் நிலையில், மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அதே அலுவலகத்தின் அருகே காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

மின்வாரிய அலுவலகத்துக்கு வந்த முதலமைச்சர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை சந்திக்காமல் சென்றது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் ஜோசப் விஜய், மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக ரீல்ஸ் வீடியோக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து வருவதாக அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுவதாகவும் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக மின்வெட்டுக்கான காரணம் குறித்து எரிசக்தித் துறை அமைச்சரும், மற்ற அமைச்சர்களும் வெவ்வேறு கருத்துகளை தெரிவித்து வந்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார். இந்நிலையில், பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெறாததே மின்வெட்டுக்கான காரணம் என எரிசக்தித் துறை அமைச்சர் தற்போது கூறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகமே மின்வெட்டால் பாதிக்கப்பட்ட பின்னர்தான் அதற்கான காரணம் கண்டறியப்பட்டதா என்றும் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். நிர்வாகத் திறமையின்மையை மறைப்பதற்காக எதிர்க்கட்சிகள் மீது பழி சுமத்தி மக்களை திசைதிருப்புவதை அரசு நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மின்வெட்டுக்கான உண்மையான காரணங்களை கண்டறிந்து, அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்து, தமிழக மக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்குவதில் மின்வாரியமும் தமிழக அரசும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் டிடிவி தினகரன் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam