வீரமணி வழக்கு உள்ளிட்ட மூடி மறைக்கப்பட்ட வழக்குகள் வெளிக்கொண்டு வரப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்
சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில், ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் சமூகப் பங்களிப்பு நிதியுடன், எக்ஸ்நோரா இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் ஒருங்கிணைப்பில் மறுசீரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட குளத்தை தமிழ்வளர்ச்சித்
ராஜ்மோகன்


சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில், ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் சமூகப் பங்களிப்பு நிதியுடன், எக்ஸ்நோரா இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் ஒருங்கிணைப்பில் மறுசீரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட குளத்தை தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்மோகன் திறந்து வைத்தார்.

தொடர்ந்து குளம் அமைந்துள்ள பகுதிகளை அமைச்சர் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், கீழடி என்பது தமிழர்களின் நாகரிகத்தின் அடையாளம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாகரிகத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது என்றார். கீழடி தொடர்பான ஆய்வுகளின் முடிவில் கிடைத்த முக்கிய தகவல்களை மத்திய அரசு விரைவில் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக பட்டினப்பாக்கம் என்பது இறுதி முடிவு அல்ல என்றும், இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் இறுதி முடிவை எடுப்பார் என்றும் தெரிவித்தார்.

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கு தொடர்பாக பேசிய அமைச்சர், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே இந்த வழக்கை கையில் எடுத்து முழுமையாக விசாரித்து வருவதாகக் கூறினார். ஒரு வருட காலமாக இந்த வழக்கு மூடி மறைக்கப்பட்டது ஏன் என்றும், இந்த வழக்கில் யாரை காப்பாற்ற முயற்சி செய்யப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.

ஆதாரங்கள் இருந்தும் கடந்த ஆட்சியில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், வீரமணி வழக்கை முடித்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டவர்கள் யார் என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார். முன்னாள் அமைச்சர் ரகுபதியின் கருத்துக்கும் கண்டனம் தெரிவித்தார்.

முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் வீரமணி வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இதில் யாரும் தப்பிக்க முடியாது என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

மேலும், எங்கெல்லாம் வழக்குகள் மூடி மறைக்கப்பட்டுள்ளனவோ, அவை அனைத்தும் வெளிக்கொண்டு வரப்படும் என்றும் கூறினார்.

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam