ஜெம் வீரமணி வழக்கில் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் -அண்ணாமலை
சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.) ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கில், அவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படும் காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் செல்வாக்கு மிக்க நபர்கள் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என வீ தி லீடர்ஸ் அம
Annamalai


சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.)

ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கில், அவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படும் காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் செல்வாக்கு மிக்க நபர்கள் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தமிழ்நாடு காவல்துறை கடந்த சில ஆண்டுகளில் ஊழல் மற்றும் திறமையற்ற துறையாக மாறியுள்ளதாகவும், அரசியல்வாதிகளின் விருப்பத்திற்கேற்ப செயல்படுவதாகவும் விமர்சித்துள்ளார்.

ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கின் தொடக்கக்கட்ட விசாரணை இதற்கு உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக வீடியோ ஆதாரம் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் குற்றம்சாட்டப்பட்ட நபரை அடையாளம் காண முடியவில்லை எனக் கூறி காவல்துறை விசாரணையை முடிக்க முயன்றதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்து, தொடர்ந்து விசாரணை நடத்த உத்தரவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டு, ஜெம் வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வீடியோவில் இடம்பெற்றிருந்த சிறுமியும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், விசாரணையில் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதும், அவர்களில் சிலர் சம்பவம் நடைபெற்றபோது சிறார்களாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனால், இந்த பாலியல் துஷ்பிரயோகம் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மேற்கொண்ட விரைவான நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ள அண்ணாமலை, இந்த விசாரணை ஜெம் வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகளுடன் நின்றுவிடக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பல ஆண்டுகளாக அவரை பாதுகாத்ததாக கூறப்படும் காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் செல்வாக்கு மிக்க நபர்கள் அனைவரும் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் பெருமளவு பணம் கைமாறியதாக கூறப்படும் தகவல்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் முழு பின்னணியையும், நீண்ட காலமாக செயல்பட்டதாக கூறப்படும் தொடர்பு வலையமைப்பையும் வெளிக்கொண்டு வர உடனடியாக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் நடைபெற்ற தவறுகளை காவல்துறை மீண்டும் செய்யக்கூடாது என்றும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவரின் அடையாளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P