ஜெம் வீரமணி வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான்
சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை தொழிலதிபர் ஜெம் வீரமணி தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், வழக்கின் பின்னணியில் உள்ள அனைவரையும் கண்டறிந்து, விசாரணை
சீமான்


சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை தொழிலதிபர் ஜெம் வீரமணி தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், வழக்கின் பின்னணியில் உள்ள அனைவரையும் கண்டறிந்து, விசாரணையையும் வழக்கையும் துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கல்விக்கு உதவி செய்வதாகக் கூறி விளிம்புநிலை குடும்பங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகளை குறிவைத்து பாலியல் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்திலேயே ஜெம் வீரமணி மீது ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டதாகவும், வழக்குப்பதிவு செய்யப்பட்டபோதிலும் கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்ததும், வழக்கை நீர்த்துப்போகச் செய்ய முயன்றதும் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

பெண் குழந்தை மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான காணொளி ஆதாரம் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் முந்தைய காவல்துறையின் அறிக்கையை ஏற்காமல், நடவடிக்கை கோரிய சிறப்பு போக்சோ நீதிமன்றத்தின் செயல்பாடே வழக்கு அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கு காரணமாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெம் வீரமணி பல ஆண்டுகளாக பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாகவும், இதன் பின்னணியில் பெரிய வலைப்பின்னல் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருவதாகக் கூறிய சீமான், வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், குற்றச்சாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாகக் கூறப்படும் காவல்துறை அதிகாரிகள் மீதும் துறை ரீதியான மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் அரசியல் மோதலாகவோ தேர்தல் கால பிரசாரமாகவோ மட்டுமே பயன்படுத்தப்படக் கூடாது என்றும், பின்னணியில் உள்ள நபர்கள், அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் உள்ளிட்ட அனைவரையும் விசாரணை மூலம் கண்டறிந்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் அவசியம் என்றும், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் சட்ட நடவடிக்கை இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெம் வீரமணி, சாந்தி, மகேந்திரசிம்மன் உள்ளிட்டோர் மட்டுமின்றி, வழக்கின் பின்னணியில் தொடர்புடையதாக விசாரணையில் தெரியவரும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து, வழக்கின் விசாரணையை துரிதப்படுத்தி, தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துவதாக சீமான் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam