Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 23 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளுக்கான உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகி வருவதாக திமுக துணைப் பொதுச்செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில்,
சென்னை, தேனி, தருமபுரி, திருப்பூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளுக்கான உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு மிகவும் அடிப்படைத் தேவையான உயிர்காக்கும் மருந்துகளைக்கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், சுகாதாரத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்றும் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பச்சிளம் குழந்தைகளின் விரலில் மோதிரம் அணிவித்து விளம்பரம் தேடுவதில் காட்டப்படும் அக்கறையில் ஒரு பகுதியையாவது குழந்தைகளின் உயிர்களைக் காப்பதில் காட்ட வேண்டாமா என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
எனவே, தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து மருந்துகளும் தட்டுப்பாடின்றி கிடைப்பதை தமிழ்நாடு அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P