Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச)
தவெக தலைவர் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு நடித்த கடைசி படமான ஜனநாயகன் திரைப்படம், தணிக்கை சான்றிதழ் பெறுவதற்கு முன்பே கடந்த ஏப்ரல் மாதம் இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியானது.
இது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரின் பேரில், சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் முதற்கட்டமாக 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட திருவேற்காட்டைச் சேர்ந்த ப்ரீலான்சிங் எடிட்டர் உமாசங்கர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட உமாசங்கரை பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
காவல் ஆணையரின் இந்த உத்தரவை எதிர்த்து உமாசங்கரின் சகோதரி ரேணுகாதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது சகோதரர் மீது எந்தவித முகாந்திரமும் இன்றி இயந்திரத்தனமாக குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், உமாசங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவுக்கு போதிய முகாந்திரம் இல்லை என்பதை சுட்டிக்காட்டி, காவல் ஆணையரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும் உமாசங்கரை உடனடியாக விடுதலை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b