Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 23 செப்டம்பர் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ்பாபு(48). இவர், ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் நாள்தோறும் தனது வாகனத்தில் ஓசூருக்கு சென்று வருகிறார்.
இவர், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடிக்கு உட்பட்ட சாலையை பயன்படுத்தி வரும் நிலையில், அதற்காக சுங்ககட்டணம் செலுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி சுங்கசாவடிக்கு உட்பட்ட சாலைகளில் சரியாக பராமரிக்க வில்லை. இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விபரங்கள் பெற்றார்.
அதன்படி கடந்த ஜனவரி மாதம் 21-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார்.
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் ராஜா தலைமையிலான அமர்வு, இதனை விசாரிக்க நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆணையர் பிரியா கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து அறிக்கை சமர்பித்தார்.
புகார்தாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் சாய் பிரசாந்தி, மார்க்சின் பிரபா, கவுதம்ராஜ் ஆஜராகினர்.
நெடுஞ்சாலைத்துறை சார்பில் முன்னர் இருந்த ஒப்பந்ததாரருடன் இருந்த வழக்கு நிலுவை காரணமாக சாலை பராமரிப்பு தாமதமானதாக விளக்கம் அளித்தது.
இதனை நுகர்வோர் ஆணையம் ஏற்க மறுத்து, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் அதன் பராமரிப்பு ஒப்பந்த நிறுவனம் இரண்டும் இணைந்து அல்லது தனித்தனியாகப் பாதிக்கப்பட்ட புகார்தாரருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு மற்றும் ரூ.15 ஆயிரம் வழக்கு செலவும் வழங்க உத்தரவிட்டது.
மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கீழ் பெறப்பட்ட பதிலை மேற்கோள் காட்டி கடந்த 2021ம் ஆண்டு மார்ச் முதல் 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் ரூ.919.91 கோடி வருவாய் வசூலிக்கப்பட்ட போதிலும், சாலையை பாதுகாப்பாகவும் போக்குவரத்துக்கு தகுதியாகவும் பராமரிக்கவில்லை என கூறியது.
மேலும், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான வாகன ஒட்டிகள் சந்திக்கும் மன உளைச்சலைக் கருத்தில் கொண்டு, ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.1 கோடி அபராதம் விதித்தது.
இந்த தொகையை தமிழ்நாடு மாநில நுகர்வோர் ஆணையத்தின் சட்ட உதவி நிதியத்திற்குச் செலுத்துமாறும் உத்தரவிட்டது.
ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்ட அனைத்து குறைபாடுகளையும் 2 மாதத்திற்குள் சரி செய்ய வேண்டும்.
விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் கூடுதல் போக்குவரத்து மார்ஷல்களை நியமிக்கவும், எச்சரிக்கை பலகைகள் மற்றும் வழி ஒழுங்கு அறிகுறிகளை பொருத்துமாறும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN