தெருக்கள், சாலைகளில் சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
மதுரை, 23 செப்டம்பர் (ஹி.ச.) தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள் மற்றும் நீர்நிலைகளில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்காக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்க
உயர்நீதிமன்ற மதுரை கிளை


மதுரை, 23 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள் மற்றும் நீர்நிலைகளில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்காக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள் மற்றும் நீர்நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளதாகவும், ஆதி திராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம், பறையர் தெரு, சக்கிலியர் சாலை உள்ளிட்ட சாதிப் பெயர்களை நீக்கி புதிய பெயர்களை சூட்ட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், இந்த நடவடிக்கையில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாகக் கூறி, அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, அரசாணையை செயல்படுத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம் போன்ற பெயர்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், பறையர் தெரு, சக்கிலியர் சாலை போன்ற சாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கு மாற்றாக திருவள்ளுவர், கபிலர், பாரதியார், பாரதிதாசன், தந்தை பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களை தெருக்கள் மற்றும் சாலைகளுக்கு வைக்கலாம் என அரசு பரிந்துரைத்துள்ளதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மேலும், சில இடங்களில் இதன் அடிப்படையில் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், தெருக்கள் மற்றும் சாலைகளுக்கு சாதிப் பெயர்கள் இருக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், அரசாணைக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டதுடன், பரமசிவம் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam