Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 23 செப்டம்பர் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை 44, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையாக உள்ளது.
கிருஷ்ணகிரி அருகே அமைந்துள்ள சுங்கச்சாவடி வழியாக தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருவதாகவும், ஆண்டுக்கு சுமார் ரூ.250 கோடி அளவுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையில் இருந்து கிருஷ்ணகிரி நகர் வரையிலான சுமார் 60 கிலோமீட்டர் தொலைவிலான தேசிய நெடுஞ்சாலையை பராமரிக்கும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் பாபு (55) என்பவர் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்தபோது, சாலைகள் முறையாக பராமரிக்கப்படாமல் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் குற்றம்சாட்டி கிருஷ்ணகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும், வாகனங்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்ட போதிலும், அதற்கேற்ப சாலைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும், இதனால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழும் சூழல் இருப்பதாகவும் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம், சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலையை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதற்காக ஆணையர் ஒருவர் நியமிக்கப்பட்டு, நெடுஞ்சாலை ஆய்வு செய்யப்பட்டு, அதன் அறிக்கை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை பரிசீலித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், சாலை பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படும் ஷிவா பில்டெக் என்ற தனியார் நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், புகார்தாரருக்கு ரூ.1.15 லட்சம் இழப்பீடு வழங்கவும் தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. அபராதத் தொகையை தமிழ்நாடு மாநில நுகர்வோர் ஆணையத்தின் சட்ட உதவி நிதிக்கு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலையில் தேவையான சாலை பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை 2 மாதங்களுக்குள் முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் சுங்கக் கட்டணம் வசூலித்தும் சாலையை முறையாக பராமரிக்கத் தவறியதாக கூறப்படும் தனியார் நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P