Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.)
சிறு வணிகர்களுக்கு யு.பி.ஐ. பரிவர்த்தனைக்கு ஜி.எஸ்.டி. விதிக்கப்படும் என்று பரவிய வதந்திகளுக்கு தேசிய பண பரிவர்த்தனை கழகமான என்.பி.சி.ஐ. முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
மாதந்தோறும் ஒரு லட்சம் ரூபாய் வரை யு.பி.ஐ. மூலம் பணம் பெறும் வணிகர்களுக்கு வணிகர் தள்ளுபடி கட்டணம் எனப்படும் எம்.டி.ஆர். கட்டணமே இல்லை என்றும், எனவே அவர்களுக்கு ஜி.எஸ்.டி. பிரச்சினையே எழாது என்றும் என்.பி.சி.ஐ. நேற்று
(செப்டம்பர் 22) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ விளக்கத்தில் தெரிவித்துள்ளது.
யு.பி.ஐ.யில் எம்.டி.ஆர். கட்டணம் என்பது நபரிடம் இருந்து வணிகருக்கு செல்லும் பரிவர்த்தனைகளில், அதுவும் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று கழகம் தெளிவுபடுத்தியுள்ளது. இரண்டாயிரம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு தொடர்ந்து எம்.டி.ஆர். பூஜ்ஜியமாகவே இருக்கும், எனவே அதற்கு ஜி.எஸ்.டி. விதிக்கப்படும் பேச்சுக்கே இடமில்லை.
அரசின் புள்ளிவிவரங்களின்படி, யு.பி.ஐ. வணிக பரிவர்த்தனைகளில் 96 சதவீதத்துக்கும் மேலானவை இரண்டாயிரம் ரூபாய்க்கு உட்பட்டவை என்பதால், பெரும்பாலான பரிவர்த்தனைகள் இந்த கட்டண வரம்புக்குள் வராது என்றும் என்.பி.சி.ஐ. சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், ஒருவேளை எம்.டி.ஆர். மீது வணிகர்கள் ஜி.எஸ்.டி. செலுத்த நேரிட்டாலும், அதை அவர்கள் தங்கள் பொருட்கள் அல்லது சேவைகள் விற்பனை மீதான ஜி.எஸ்.டி.யில் உள்ளீட்டு வரிக் கடனாக சரிசெய்து கொள்ளலாம் என்றும், எனவே வணிகர்கள் மீது கூடுதல் சுமை ஏதும் விழாது என்றும் அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் முயற்சியில் சிறு வணிகர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதை உறுதி செய்வதே இந்த தெளிவுபடுத்தலின் நோக்கம் என்று என்.பி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b