Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னையில் தொழிலதிபர் ஜெம் வீரமணியால் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், நாள்தோறும் வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்ததாக கூறப்படும் நிலையில், குற்றவாளிகளை தப்பிக்கச் செய்ய கடந்த காலங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் வறுமையைப் பயன்படுத்திக் கொண்டு, பணபலத்தை ஆயுதமாகக் கொண்டு சமூகத்தில் பெரிய மனிதர்கள் என காட்டிக் கொள்பவர்கள் சிறுமிகளை சீரழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக இந்தக் கொடுமை தொடர்ந்ததாகவும், கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் 6-ம் தேதியே காவல்துறையிடம் ஆதாரங்கள் அளிக்கப்பட்ட போதிலும் தொடர் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி வழக்கை கைவிட அனுமதி கோரி, கடந்த பிப்ரவரி 18-ம் தேதி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறை மனு தாக்கல் செய்ததாகவும், அதனை நீதிபதி ஏற்க மறுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னரே இந்த விவகாரத்தில் தொடர்புடைய பலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி வழங்குவதில் சென்னை போக்சோ நீதிமன்றம் காட்டிய அக்கறையும் கடுமையும் பாராட்டத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விசாரணையில் வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் தேவையான பட்சத்தில் போக்சோ சட்டப்பிரிவுகளை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியவர்கள் மட்டுமின்றி, அதற்கு துணைபுரிந்தவர்கள் மற்றும் வழக்கை கைவிட முயன்றவர்கள் மீதும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam