மேகதாது அணையை தடுத்து ராசிமணல் அணை கட்ட வலியுறுத்தி பிரச்சாரப் பயணம் – பி.ஆர்.பாண்டியன்
சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.) கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்தவும், அதற்கு மாற்றாக ராசிமணலில் புதிய அணை கட்டவும் வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்று வரும் பிரச்சாரப் பயணம் சென்னை எழும்பூரி
Prp


சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.)

கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்தவும், அதற்கு மாற்றாக ராசிமணலில் புதிய அணை கட்டவும் வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்று வரும் பிரச்சாரப் பயணம் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்று வரும் இந்தப் பயணத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வன்னியரசு,

பி.ஆர்.பாண்டியன் முன்னெடுத்து வரும் போராட்டம் விவசாயிகளுக்கான போராட்டம் மட்டுமல்ல என்றும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளுக்கான போராட்டம் என்றும் தெரிவித்தார். இது கர்நாடகாவுக்கு எதிரான போராட்டம் அல்ல என்றும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்கான போராட்டம் என்றும் அவர் கூறினார்.

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு தொடர்ந்து தமிழகத்தின் உரிமையை மறுத்து வருவதாகவும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் செயல்படுவது தமிழகத்தின் உரிமைகளை மதிக்காத போக்காகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கர்நாடக அரசுடன் இணைந்து ஒன்றிய அரசும் தமிழகத்திற்கு பாகுபாடு காட்டுவதாகவும் வன்னியரசு குற்றம்சாட்டினார்.

மேலும், பெருந்தலைவர் காமராஜர் கடந்த 1961-ஆம் ஆண்டிலேயே ராசிமணல் பகுதியில் அணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டியதாகவும், அந்த அணை அமைக்கப்பட்டால் 50 முதல் 100 டி.எம்.சி. வரை தண்ணீரை சேமிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் மின்சார உற்பத்திக்கும் வாய்ப்பு ஏற்படும் என்றும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அணை அமைப்பதன் மூலம் தமிழகத்தின் நீர் மற்றும் வாழ்வாதார உரிமையை பாதுகாக்க முடியும் என்றும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா,

காவிரி நதிநீர் பிரச்சினையை தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினையாக மட்டும் பார்க்கக் கூடாது என்றும், இது மனித குலத்துக்கான பிரச்சினை என்றும் தெரிவித்தார்.

நீர் அனைவருக்கும் பொதுவானது என்றும் அவர் கூறினார்.

கர்நாடகாவில் எந்த ஆட்சி இருந்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கக்கூடாது என்ற நிலைப்பாடு தொடர்வதாகவும், 2014-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு ஆட்சியில் இருந்தபோதும் இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினையில் பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாகவும் சுதா குற்றம்சாட்டினார்.

மேலும், கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவது நடைபெற முடியாத ஒன்று என்றும், காங்கிரஸ் கட்சி எப்போதும் விவசாய மக்களுடன் இணைந்து நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், மேகதாது அணை கட்டுமானத்தைத் தடுத்து, ராசிமணலில் அணை கட்ட வலியுறுத்தி நடைபெறும் தங்களது பிரச்சாரப் பயணத்திற்கு 18 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறினார்.

தேர்தல் களத்தில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் இருந்தாலும், இந்தக் கோரிக்கைக்கு அவை ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், குறிப்பாக தமிழக வெற்றிக் கழகமும் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேகதாது அணையைத் தடுத்து ராசிமணல் அணையை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையில் அனைத்துக் கட்சிகளிடையேயும் ஒருமித்த கருத்தை உருவாக்கும் தங்களது பயணம் வெற்றி பெற்றுள்ளதாக பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

மேலும், நாளை திருவாரூரில் பிரச்சாரப் பயணம் நிறைவடையும் என்றும், அதன்பின்னர் முதலமைச்சரை சந்தித்து விவசாயிகளிடம் பெறப்பட்ட கையெழுத்துகள் அடங்கிய கடிதத்தை வழங்க உள்ளதாகவும் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ