Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.)
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் கணக்குத் தலைவராக பணியாற்றி வரும் முரளி கிருஷ்ணன் (50) என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தர்மம் என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி மதியம் 1.50 மணியளவில் குறிப்பிட்ட செல்போன் எண்ணில் இருந்து ஆகாஷ் கேஸ்டிங் ஹப் என்ற வாட்ஸ்அப் குழுவில் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அதில், தர்மம் திரைப்படத்தில் செவிலியர் மற்றும் செவிலியர் உதவியாளர் கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஆட்கள் தேவை என்றும், அவர்களுக்கு ரூ.18.55 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அக்டோபர் 11-ஆம் தேதி முதல் நவம்பர் 14-ஆம் தேதி வரை சென்னை மற்றும் தாய்லாந்தில் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திரைப்படத்தில் நடிப்பதற்கான நடிகர் அடையாள அட்டை பெற ரூ.12,500 செலுத்த வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அனுமதியின்றி, அந்நிறுவனத்தின் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து இதுபோன்ற விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி போலி ஆவணங்கள் தயாரித்து விளம்பரம் செய்ததாக கூறப்படும் ஆகாஷ் கேஸ்டிங் ஹப் மற்றும் சம்பந்தப்பட்ட செல்போன் எண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில், தேனாம்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலி ஆவணங்கள் தயாரித்து விளம்பரம் செய்தது யார் என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P