ரூ.200 செலவு செய்து ஆட்சியர் அலுவலகம் சென்ற முதியோர் தம்பதி- உதவித்தொகை வழங்கப்பட்டதாக அரசு தகவல்
சிவகங்கை, 23 செப்டம்பர் (ஹி.ச.) சிவகங்கை மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை கோரி தள்ளாடும் வயதிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மனு அளித்த வயதான தம்பதிக்கு, இந்த மாதத்திற்கான முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல
தமிழ்நாடு அரசு


சிவகங்கை, 23 செப்டம்பர் (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை கோரி தள்ளாடும் வயதிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மனு அளித்த வயதான தம்பதிக்கு, இந்த மாதத்திற்கான முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

திருமதி தனலஷ்மி, அவரது கணவர் அண்ணகளஞ்சியம் ஆகியோர் முதியோர் உதவித்தொகை பெறுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தனர்.

இதற்காக அவர்கள் ரூ.200 கடன் வாங்கி செலவு செய்து அலுவலகத்திற்கு வந்ததாக கூறப்படும் நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.

வயதான தம்பதி உதவித்தொகைக்காக அலைக்கழிக்கப்படுவதாக கூறப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளானது.

இந்த நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளது.

அதில், தனலஷ்மிக்கு இந்த மாதத்திற்கான முதியோர் உதவித்தொகை கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவரது கணவர் அண்ணகளஞ்சியத்திற்கான இந்த மாத முதியோர் உதவித்தொகை செப்டம்பர் 14-ஆம் தேதி அஞ்சல் மூலம் மின்னணு பண ஆணை (eMO) வழியாக விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

இருவருக்கும் முதியோர் உதவித்தொகை கிடைத்திருப்பது அவர்களது மகன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம், முதியோர் தம்பதி உதவித்தொகை கோரி ஆட்சியர் அலுவலகம் வந்த சம்பவம் தொடர்பாக எழுந்த கேள்விகளுக்கு மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P