Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.)
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த நபரை சிறப்பு முகாமில் அடைத்த உத்தரவை ரத்து செய்து, அவரை விடுவிக்க திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த ஜோசப் லூர்டஸ் பிராங் பெர்ணான்டோ என்பவர், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னரும் தன்னை திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருப்பதாகக் கூறி, அதற்கான உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை கியூ பிரிவு போலீஸார் மேற்கொண்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கியூ பிரிவு போலீஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்காக மனுதாரரை தொடர்ந்து சிறப்பு முகாமில் அடைத்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து, ஜோசப் லூர்டஸ் பிராங் பெர்ணான்டோவை சிறப்பு முகாமில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், அவரை முகாமில் இருந்து விடுவிக்க திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.
Hindusthan Samachar / GOKILA arumugam