Enter your Email Address to subscribe to our newsletters

ஆதிலாபாத் , 23 செப்டம்பர் (ஹி.ச.)
ஆதிலாபாத் ரிம்ஸ் ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவில் ஏ.சி. வெடித்ததில் 5 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்துக்கு அரசின் அலட்சியமே காரணம் என்று தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர்களில் ஒருவரான கவிதா குற்றம்சாட்டினார்.
இந்த விபத்தில் காயமடைந்து ஆதிலாபாத்தில் உள்ள சுரக்ஷா குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளையும், அவர்களது பெற்றோரையும் கவிதா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஒருங்கிணைந்த ஆதிலாபாத் மாவட்டத்தை தத்தெடுத்துள்ளதாக கூறிய முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, 5 பழங்குடியின மற்றும் சிறுபான்மை பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தபோதும் அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறக்கூட நேரம் ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று ரேவந்த் ரெட்டி அரசுக்கு கவிதா கெடு விதித்தார். மேலும், பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சாலை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும், மத்திய அரசு வழங்கிய நிதி குறித்த விவரங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பழங்குடியின மக்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த ஆதிலாபாத் மாவட்டம் முழுவதும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் கவிதா எச்சரித்தார்.
ரிம்ஸ் ஆஸ்பத்திரியில் 150 ஏ.சி.க்கள் இருந்தபோதிலும், அவற்றை பராமரிக்க ஒரு மெக்கானிக் கூட இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், சுகாதாரத்துறையில் ஆரோக்கியஸ்ரீ திட்டத்தின் கீழ் ரூ.500 கோடி நிலுவைத் தொகை இருப்பதாகவும், இதுபோன்ற நிலை மருத்துவத்துறையின் மீதான அரசின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாகவும் கவிதா தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA