ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு புகார் – கவி பிரசாத் விமான நிலையத்தில் கைது
சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2021 முதல் 2025-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரூ.1,020 கோடி மதிப்பிலான அரசு ஒப்பந்தங்களில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் கே.என். ந
டெண்டர் முறைகேடு


சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.)

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2021 முதல் 2025-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரூ.1,020 கோடி மதிப்பிலான அரசு ஒப்பந்தங்களில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் நெருங்கிய உதவியாளராக குறிப்பிடப்பட்டுள்ள கவி பிரசாத் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் இருந்து துபாய் செல்ல முயன்றபோது அவரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, அவரது சகோதரர்கள் கே.என். மணிவண்ணன், என். ரவிச்சந்திரன், கவி பிரசாத் உள்ளிட்ட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

கடந்த செப்டம்பர் 4-ம் தேதி சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கிற்கு அடிப்படையாக, அமலாக்கத்துறை கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அளித்த 258 பக்க அறிக்கை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு ஒப்பந்தங்களில் முறைகேடு செய்யப்பட்டு சுமார் ரூ.1,020 கோடி அளவுக்கு முறைகேடான பலன் கிடைத்ததாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டிருந்தது.

லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையின்படி, கவி பிரசாத் அரசு அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து, வரவிருந்த பணிகள் மற்றும் டெண்டர்கள் குறித்த தகவல்களை முன்கூட்டியே பெற்றதாகவும், அதன் அடிப்படையில் குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களை டெண்டர் தொடங்குவதற்கு முன்பே தேர்வு செய்ய உதவியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மாதவரம் பூஸ்டர் நிலையத்தை 3 ஆண்டுகளுக்கு இயக்கி பராமரிக்கும் பணிக்கான டெண்டர் தொடர்பான தகவல், டெண்டர் திறப்பதற்கு 22 நாட்களுக்கு முன்பே கவி பிரசாத்துக்கு அனுப்பப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சுமார் ரூ.75 லட்சம் மதிப்பிலான அந்தப் பணிக்கு குறிப்பிட்ட நிறுவனம் முன்கூட்டியே அடையாளப்படுத்தப்பட்டதாகவும், பின்னர் அதே நிறுவனத்துக்கே பணி வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

அதேபோல், சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பான மூன்று ஒப்பந்தங்கள், டெண்டர் திறப்பதற்கு முன்பே குறிப்பிட்ட ஒப்பந்ததாரருக்கு ஒதுக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டதாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.5.25 கோடி மதிப்பிலான இந்த மூன்று பணிகளுக்கு சுமார் 10 சதவீதம் 'கட்சி நிதி' எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் முதல் தகவல் அறிக்கையை மேற்கோள் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசு ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை சட்டவிரோத பணம் வசூலிக்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தொகை தொடர்பான தகவல்கள் சில ஆவணங்கள் மற்றும் மின்னணு தகவல்களில் 'கட்சி நிதி' என குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை விசாரணையின்போது கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் செல்போன்களில் இருந்து பெறப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்கள், புகைப்படங்கள் மற்றும் கணக்குத் தாள்கள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்கள், வழக்கின் விசாரணையில் முக்கிய ஆதாரங்களாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam