Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த சில நாட்களாக வெகு விமரிசையாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவ விழாவின் கடைசி நாளான இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது.
இதையொட்டி கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளையொட்டி, இன்று அதிகாலை ஏழுமலையான் கோயிலில் இருந்து உற்சவ மூர்த்திகளும், சக்கரத்தாழ்வாரும் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக வராக சுவாமி கோயிலுக்கு அழைத்து வரப்பட்டனர்.
அங்கு வராக சுவாமி கோயில் எதிரே மலையப்ப சுவாமி மற்றும் தாயார்களுக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று வருகிறது. பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட பல்வேறு மூலிகை திரவியங்கள் கொண்டு திருமஞ்சனம் செய்யப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தீர்த்தவாரியை காண ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்துள்ளனர்.
தீர்த்தவாரி நிகழ்வைத் தொடர்ந்து பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.
இதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ