Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 23 செப்டம்பர் (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள். எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்த இவர், கடந்த 2021-ஆம் ஆண்டு வேலைக்காக திருவண்ணாமலை அடுத்த போளூர் பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த விழுப்புரம் மண்டல அரசு பேருந்து அருள் மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரது மனைவி புஷ்பா, இழப்பீடு கோரி திருவண்ணாமலை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி மதுசூதனன், விபத்தில் உயிரிழந்த அருளின் குடும்பத்துக்கு ரூ.35 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் மண்டலத்துக்கு உத்தரவிட்டார்.
இந்தத் தொகையை 14.02.2026-க்குள் வழங்கவும் உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நீதிமன்றத்தில் ரூ.25 ஆயிரம் மட்டும் செலுத்திவிட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால், அபராதம் உள்ளிட்ட தொகை சேர்த்து ரூ.43 லட்சமாக உயர்ந்த நிலையில், திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புதுச்சேரிக்கு புறப்பட அரசு பேருந்து தயாராக இருந்தது.
அப்போது அங்கு சென்ற திருவண்ணாமலை நீதிமன்ற அமீனா மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற உத்தரவுடன் பேருந்தின் மீது நோட்டீஸ் ஒட்டி, அந்த பேருந்தை ஜப்தி செய்தனர்.
இதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஜப்தி செய்யப்பட்ட அரசு பேருந்து திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
பேருந்து புறப்படத் தயாராக இருந்த நேரத்தில் திடீரென ஜப்தி செய்யப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.
இதனால் திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Hindusthan Samachar / P YUVARAJ