Enter your Email Address to subscribe to our newsletters

பெரம்பலூர், 23 செப்டம்பர் (ஹி.ச.)
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள பாண்டகப்பாடி ஏரியில் 200-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வலசைப் பறவைகள் குவிந்துள்ளன.
கடுமையான வெயில் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையிலும், ஏரியில் உள்ள நீர் மற்றும் உணவு வளம் பறவைகளை ஈர்த்துள்ளதால், பாண்டகப்பாடி ஏரி தற்போது பொதுமக்கள் மற்றும் பறவை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது கடுமையான வெப்பநிலை நிலவி வருவதுடன், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறையும் காணப்படுகிறது.
இந்நிலையில், பாண்டகப்பாடி ஏரியில் அண்மையில் பெய்த மழை மற்றும் ஏற்கெனவே இருந்த நீரின் காரணமாக சுமார் 30 சதவீதம் அளவுக்கு நீர் இருப்பு உள்ளது.
ஏரியில் நிலவும் அமைதியான சூழல், நீர் மற்றும் கிடைக்கும் உணவு ஆகியவை வெளிநாட்டு பறவைகளுக்கு ஏற்ற வாழ்விடமாக அமைந்துள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப உணவு, இருப்பிடம் மற்றும் இனப்பெருக்கத்திற்காக பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் நீண்ட தூரம் வலசை செல்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் போதிய மழையின்மை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெளிநாட்டு வலசைப் பறவைகளின் வரத்து குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பாண்டகப்பாடி ஏரிக்கு சைபீரியன் கொக்கு என அழைக்கப்படும் செங்கால் நாரை, யூரேசியா ஸ்பூன்பில் எனப்படும் கரண்டி வாயன் உள்ளிட்ட பறவை இனங்கள் 200-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வந்துள்ளன.
செங்கால் நாரைகள் ஏரியில் இறகுகளை விரித்தபடி நின்று மீன்களைப் பிடிக்க காத்திருப்பதும், கூட்டமாக வானில் வட்டமிட்டு பறப்பதும் பார்ப்போரை வெகுவாக கவர்ந்து வருகிறது.
அதேபோல், வெண்மை நிறத்தில் காணப்படும் கரண்டி வாயன்கள் தங்களது நீண்ட, கரண்டி போன்ற அலகால் ஏரியில் உணவைத் தேடுவதும், கூட்டமாக நீரில் சுற்றித்திரிவதும் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது.
காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்கு இடையே, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருந்து உணவு, இருப்பிடம் மற்றும் இனப்பெருக்கத்திற்காக தமிழகத்தை நோக்கி வந்துள்ள இந்தப் பறவைகள், பாண்டகப்பாடி ஏரியை தங்களது தற்காலிக வாழ்விடமாக தேர்வு செய்திருப்பது இயற்கை ஆர்வலர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வறட்சியான சூழலிலும் பாண்டகப்பாடி ஏரியில் குவிந்துள்ள வெளிநாட்டு பறவைகளை காண பொதுமக்களும், பறவை ஆர்வலர்களும் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.
இதனால், அமைதியாக காணப்பட்ட பாண்டகப்பாடி ஏரி தற்போது பறவை ஆர்வலர்களை ஈர்க்கும் சிறிய சுற்றுலாத்தலமாகவும் மாறியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ