வியட்நாம் பயணிகள் விமானம் இயந்திரக் கோளாறால் சென்னையில் அவசரமாக தரையிறக்கம் - 152 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச) வியட்நாமில் இருந்து இலங்கைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற தனியார் பயணிகள் விமானம் ஒன்று, நடுவானில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் இலங்க
Vietnamese passenger plane makes emergency landing


சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச)

வியட்நாமில் இருந்து இலங்கைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற தனியார் பயணிகள் விமானம் ஒன்று, நடுவானில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானம் இலங்கை வான் எல்லையை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, விமானத்தின் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானிகள் கண்டறிந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவசரமாக தரையிறங்க அனுமதி கோரப்பட்டது. விமான நிலைய அதிகாரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓடுதளத்தை தயார் நிலையில் வைத்திருந்தனர்.

விமானிகளின் சாதுரியமான செயல்பாட்டால் விமானம் சென்னையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தில் விமானிகள் உட்பட 152 பயணிகள் பயணித்த நிலையில், அனைவரும் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர் சேதமும் இன்றி உயிர் தப்பினர்.

தரையிறங்கிய உடனேயே அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, விமான நிலையத்தில் உள்ள ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே இயந்திரக் கோளாறு குறித்து ஆய்வு செய்வதற்காக விமான பொறியாளர்கள் கொண்ட நிபுணர் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

விமானத்தில் ஏற்பட்ட பழுதை முழுமையாக சரி செய்த பிறகு, விமானம் இன்று மீண்டும் இலங்கைக்கு புறப்பட்டுச் செல்லும் என விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b