Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 24 செப்டம்பர் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. மாவட்டம் முழுவதும் இன்று ஒரே நாளில் 354 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பருவமழை தொடங்கியுள்ள நிலையில், காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருந்துகளுடன் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் தங்கள் வீடுகளைச் சுற்றி மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், தேவையற்ற பொருட்களில் தண்ணீர் தேங்கினால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் என்பதால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், மாவட்டத்தில் டெங்கு பரவலைத் தடுக்க கொசு ஒழிப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதற்காக ஏற்கனவே பணியில் இருந்த 600 கொசு ஒழிப்புப் பணியாளர்களின் எண்ணிக்கை தற்போது 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இவர்கள் வீடு வீடாகச் சென்று கொசு மருந்து தெளித்தல், நிலவேம்பு கசாயம் வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b