Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை ,4 செப்டம்பர் (ஹி.ச)
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதாகக் கூறி, தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளதாக அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட அச்சரப்பாக்கம் மற்றும் ரெட்டிப்பாளையம் பகுதிகளிலும், தாராபுரம் தொகுதியிலும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இரு தொகுதிகளிலும் பறக்கும் படைகள் மூலம் உடனடியாக தீவிர கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், பணப்பட்டுவாடா தொடர்பான புகார்களை தேர்தல் ஆணையம் உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என்றும் அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் தேர்தல் பிரசார செலவுகள் மற்றும் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இரு தொகுதிகளிலும் தேர்தல் செலவினங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக உரிய கண்காணிப்பை மேற்கொண்டு, விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் அதிமுகவின் புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ