Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 24 செப்டம்பர் (ஹி.ச.)
இந்தியாவில் பள்ளி சேர்க்கைக்கான கட்டணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 2 வயது குழந்தையை மழலையர் பள்ளியில் சேர்ப்பதற்காக ரூ.1.5 லட்சம் கட்டாய நன்கொடை கேட்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அகமதாபாத்தை சேர்ந்த தொழிலதிபர் பிரிதேஷ் லக்கானி, தனது 2 வயது குழந்தையை அங்குள்ள பிரபலமான மழலையர் பள்ளியில் சேர்க்க முயன்றார்.
அப்போது, குழந்தையின் சேர்க்கைக்காக ரூ.1.5 லட்சம் ‘கட்டாய நன்கொடை’ வழங்க வேண்டும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
மேலும், அந்த தொகையை செலுத்தவில்லை என்றால், குழந்தை நுழைவுத்தேர்வில் தோல்வி அடைந்ததாக கூறி, கூடுதல் கட்டணங்களை வசூலிக்க நேரிடும் என மறைமுகமாக எச்சரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து லக்கானி கடந்த 22-ந்தேதி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “2 வயது குழந்தையின் ஆரம்பக்கல்வி இவ்வளவு விலை உயர்ந்ததாக இருக்கக்கூடாது.
குழந்தைகள் விளையாடி மகிழ வேண்டிய வயதில், நுழைவுத்தேர்வு என்ற பெயரில் அவர்களை மதிப்பிடுவது எந்த வகையில் நியாயம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை தொடர்ந்து, ஏராளமான பெற்றோர் தங்களுக்கு நேர்ந்ததாக கூறப்படும் பள்ளி கட்டண சுமை மற்றும் சேர்க்கை தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
கல்வி என்பது சேவைத்துறையில் இருந்து விலகி, பெரும் வணிகமாக மாறிவிட்டதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், பள்ளி சேர்க்கையின் பெயரில் சட்டவிரோதமாக வசூலிக்கப்படும் நன்கொடைகளை கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நடுத்தர வர்க்க பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA