கனமழை -மாவட்ட கலெக்டர்களுக்கு சந்திரபாபு முக்கிய உத்தரவு
அமராவதி , 24 செப்டம்பர் (ஹி.ச.) ஆந்திராவில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உயர் அ
A


அமராவதி , 24 செப்டம்பர் (ஹி.ச.)

ஆந்திராவில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதையடுத்து, மழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

அப்போது, மழை முழுமையாக குறைந்து வானிலை சீராகும் வரை அதிகாரிகள் அனைவரும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும், எந்த சூழ்நிலையிலும் அலட்சியம் காட்டக்கூடாது என்றும் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.

மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளில் நீர்மட்டம், நீர்வரத்து ஆகியவற்றை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

நீர்மட்டம் அதிகரிக்கும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக நிவாரண முகாம்களுக்கு முன்கூட்டியே அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தரமான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதிகள் மற்றும் தேவையான மருந்துகள் தடையின்றி கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகங்கள் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு கூறினார்.

மேலும், பலத்த காற்று காரணமாக மரங்கள் அல்லது மின்கம்பங்கள் சாய்ந்தால், அவற்றை உடனடியாக அகற்றி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டால் விரைந்து நடவடிக்கை எடுத்து, பொதுமக்களுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

மழை குறைந்ததும் விவசாய நிலங்களில் ஏற்பட்டுள்ள பயிர் சேதத்தை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து துல்லியமாக கணக்கிட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு தேவையான உதவிகளை வழங்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA