Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 24 செப்டம்பர் (ஹி.ச.)
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் 6 லட்சத்துக்கும் அதிகமான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அவற்றை உடனுக்குடன் கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 3 லட்சம் நெல் மூட்டைகளும், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பிற காவிரி பாசன மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் மூட்டைகளும் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனால், அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்காக உழவர்கள் நெல் மூட்டைகளுடன் இரவு பகலாக கொள்முதல் நிலையங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், உழவர்கள் அரும்பாடு பட்டு விளைவித்த நெல்லை உரிய காலத்தில் கொள்முதல் செய்யாமல் அலைக்கழிப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொள்முதல் நிலையங்களில் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாமல் இருப்பதும், சுமைதூக்கும் தொழிலாளர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லாததும் நெல் மூட்டைகள் தேங்குவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.
சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலி குறைவாக இருப்பதால் போதிய எண்ணிக்கையில் அவர்கள் பணிக்கு வருவதில்லை என்றும், ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் சுமார் 30 சதவீத தொழிலாளர்கள் மட்டுமே பணிக்கு வருவதால், நாளொன்றுக்கு 900 முதல் 1,000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்ய வேண்டிய நிலையில் 300 முதல் 400 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை அறுவடை தற்போது தொடங்கியுள்ள நிலையில், அடுத்தடுத்த நாட்களில் அறுவடை தீவிரமடையும் போது கொள்முதல் நிலையங்களில் தேங்கும் நெல் மூட்டைகளின் எண்ணிக்கை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
காவிரி பாசன மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், நெல் மூட்டைகள் உடனடியாக கொள்முதல் செய்யப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்படாவிட்டால் உழவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
எனவே, கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனுக்குடன் கிடங்குகள் மற்றும் அரவை நிலையங்களுக்கு கொண்டு செல்ல உரிய வசதிகளை ஏற்படுத்துவதுடன், கிடங்கு மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறையை உடனடியாக சரிசெய்து, உழவர்கள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை தாமதமின்றி கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P