ரூ.46 கோடி மோசடி புகார் - நடிகை ராதா ஆஜராகாததால் பரபரப்பு
சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.) ரூ.46 கோடி காசோலை மோசடி புகார் தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அழைப்பு விடுத்திருந்த நிலையில், நடிகை ராதா இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகவில்லை என தகவல் வெளியாக
ராதா


சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.)

ரூ.46 கோடி காசோலை மோசடி புகார் தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அழைப்பு விடுத்திருந்த நிலையில், நடிகை ராதா இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ராதா கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதில், தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

ராதாவின் புகாரின்படி, ஐடிபிஐ வங்கியில் ஏஆர்எஸ் கார்டன் ஸ்டூடியோ பெயரில் செயல்பட்டு வந்த நடப்புக் கணக்குக்கான பழைய காசோலைப் புத்தகத்தில் கையெழுத்திட்டிருந்த சில வெற்று காசோலைகள் சென்னை வீட்டில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அவை தனது அனுமதியின்றி எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

2025 ஜனவரியில் நிறுவனத்தின் பெயர் ஆர்ஆர் கார்டன்ஸ் என மாற்றப்பட்ட பின்னர் புதிய காசோலைப் புத்தகம் பெற்றதாகவும், பழைய காசோலைப் புத்தகத்தை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதாகவும் ராதா தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி வங்கியில் இருந்து தகவல் வந்தபோதுதான், பழைய காசோலைகளில் 5 காசோலைகள் அம்பிகாவின் பெயரில் பணம் பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்டிருப்பது தெரியவந்ததாகக் கூறியுள்ளார். அந்த காசோலைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.46 கோடி என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த காசோலைகளை தனது சகோதரர் நிரப்பியதாகவும், அம்பிகாவும் அவரும் இணைந்து அவற்றை பயன்படுத்த முயன்றதாகவும் ராதா குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையே, ராதாவின் குற்றச்சாட்டுகளை அம்பிகா மறுத்துள்ளார். சொத்து பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ராதா தன்னிடம் காசோலைகளை வழங்கியதாகவும், தங்களுக்கு இடையிலான சொத்து விவகாரத்தில் ராதா தர வேண்டிய தொகைக்காக காசோலைகள் வழங்கப்பட்டதாகவும் அம்பிகா தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இரு தரப்பினரும் மாறுபட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், காசோலைகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன, அவை யாரால் நிரப்பப்பட்டன, பணம் பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னணி என்ன என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றச்சாட்டுகள் தொடர்பான உண்மை நிலை போலீஸ் விசாரணையின் முடிவிலேயே தெரியவரும்.

மேலும், இந்த காசோலை விவகாரத்துடன் சகோதரிகளுக்கு இடையிலான சொத்து மற்றும் நகை தொடர்பான பிரச்சினைகளும் இருப்பதாக இரு தரப்பினரின் கருத்துகள் மூலம் தெரியவந்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam