சென்னை மெட்ரோ ரயிலில் சர்ச்சைக்குரிய விளம்பரம் அகற்றம் -சம்பந்தப்பட்ட நிறுவனம் மன்னிப்பு
சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை மெட்ரோ ரயில்களில் இடம்பெற்றிருந்த விளம்பரம் தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆஷிஷ் சட்டர்ஜிக்கு கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி கடிதம் அனுப்பியிருந்தார
சு.வெங்கடேசன்


சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை மெட்ரோ ரயில்களில் இடம்பெற்றிருந்த விளம்பரம் தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆஷிஷ் சட்டர்ஜிக்கு கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி கடிதம் அனுப்பியிருந்தார்.

இதற்கு செப்டம்பர் 10ஆம் தேதி பதிலளித்த ஆஷிஷ் சட்டர்ஜி, சம்பந்தப்பட்ட விளம்பரத்தின் உள்ளடக்கம் வேறுபட்ட பொருளை ஏற்படுத்தியதாகவும், அது பொருத்தமற்றது என தெரியவந்ததைத் தொடர்ந்து செப்டம்பர் 5ஆம் தேதியே விளம்பரம் அகற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், விளம்பரத்தை வெளியிட்ட திருவள்ளுவர் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்கத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட விளம்பர முகமை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சம்பந்தப்பட்ட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களிடம் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதே விளம்பரத்தின் நோக்கம் என விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும், விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்ட குறிப்பிட்ட சொற்றொடர் வேறுபட்ட பொருளை ஏற்படுத்தியதால், அது பொருத்தமற்றதாக அமைந்ததை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, விளம்பரம் உடனடியாக அகற்றப்பட்டதுடன், ஏற்பட்ட மனவருத்தத்துக்கு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் பொதுவெளியில் வெளியிடப்படும் விளம்பரங்கள் சமூக மதிப்புகள், தனிமனித கண்ணியம் மற்றும் உள்ளடக்க உணர்வுகளை கருத்தில் கொண்டு கூடுதல் பொறுப்புடன் உருவாக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.

இதுதொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களின் கண்ணியம் மற்றும் சமத்துவம் தொடர்பான எந்தவொரு வெளிப்பாடும் பொதுவெளியில் கூடுதல் பொறுப்புணர்வுடன் கையாளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சென்னை மெட்ரோ போன்ற பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் பொது போக்குவரத்து அமைப்புகளில் இடம்பெறும் விளம்பரங்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் பரிசீலிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது கடிதத்துக்கு உடனடியாக பதிலளித்து விளம்பரத்தை அகற்றியதுடன், சம்பந்தப்பட்ட நிறுவனம் மன்னிப்பு தெரிவித்திருப்பதை வரவேற்பதாகக் கூறியுள்ள சு.வெங்கடேசன், எதிர்காலத்தில் இதுபோன்ற சர்ச்சைக்குரிய விளம்பரங்கள் இடம்பெறாத வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளம்பரக் கட்டுப்பாட்டு நடைமுறைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam