சென்னையில் ரூ.150 கோடியில் 780 சாலைகள் மேம்பாடு
சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச) சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சேதமடைந்துள்ள 160 கிலோமீட்டர் நீளமுள்ள 780 பேருந்து மற்றும் உட்புறச் சாலைகள் ரூ.150 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவ
சென்னை மாநகராட்சி


சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச)

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சேதமடைந்துள்ள 160 கிலோமீட்டர் நீளமுள்ள 780 பேருந்து மற்றும் உட்புறச் சாலைகள் ரூ.150 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின்படி, 2026-27ஆம் நிதியாண்டில் சென்னையில் 360 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் ரூ.300 கோடி செலவில் சீரமைக்கப்பட உள்ளன.

இதன் முதற்கட்டமாக, சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் 45.13 கி.மீ. நீளமுள்ள 66 பேருந்து தடச் சாலைகள் மற்றும் 114.87 கி.மீ. நீளமுள்ள 714 உட்புறச் சாலைகள் என மொத்தம் 780 சாலைகளை மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கைகள் அரசின் நிர்வாக அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தற்போது, திட்ட அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்பீடுகளை தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் ஆய்வு செய்து வருகிறது.

அரசின் நிர்வாக அனுமதி கிடைத்தவுடன் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக சாலை மேம்பாட்டுப் பணிகளை நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam