Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 24 செப்டம்பர் (ஹி.ச.)
கடலூர் மாநகராட்சி மேயராக சுந்தரி பதவி வகித்து வருகிறார்.
மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் முறையாக நடக்கவில்லை எனக் கூறி மேயர் சுந்தரிராஜா தனது கணவர் மற்றும் கட்சியினருடன் ஆணையரிடம் புகாரளிக்கச் சென்றுள்ளார்.
மேயர் தவிர மற்றவர்கள் யார் என ஆணையர் கிஷண் குமார் கேட்கவே, ஆத்திரமடைந்த ராஜா, என்னையே யார்னு கேட்பியா? நான் திமுககாரன் என்றும் இது ஒன்னும் உங்கப்பன் வீடு இல்லை என்றும் ஆணையரை ஒருமையில் பேசினார்.
அவரது பேச்சால் கோபமடைந்த ஆணையர், மரியாதையாகப் பேசுங்கள் என்றும் உங்கள் ரௌடியிசத்தை எல்லாம் இங்கே காண்பிக்க வேண்டாம் என்றும் கூறினார்.
தகவலறிந்து சென்ற போலீசார் ஆணையர் அறையிலிருந்து திமுகவினரை வெளியே அழைத்து வந்து குண்டுக்கட்டாக வேனில் ஏற்றினர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மாநகராட்சி ஆணையரை அவரது அலுவலகத்திலேயே வைத்து மேயரின் கணவர் ராஜா தரக்குறைவாகவும், மிரட்டும் தொனியிலும் பேசியதாக வீடியோக்கள் வெளியாகின. இந்த சம்பவத்தின் போது மேயரின் மகன் பாலாஜி உட்பட 10 பேர் உடனிருந்ததாகவும் தெரிகிறது.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையரின் உதவியாளர் அளித்த புகாரின் அடிப்படையில், கடலூர் புதுநகர் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், மேயர் சுந்தரியின் கணவர் ராஜா, அவரது மகன் பாலாஜி உட்பட 10 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாநகராட்சி ஆணையர் போன்ற அரசு உயர் அதிகாரியையே தரக்குறைவாக பேசிய சம்பவம் கடலூரில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b