Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 24 செப்டம்பர் (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அக்கட்சியின் வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து, வருகிற 30-ந்தேதி தாராபுரத்தில் நடைபெற உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, தாராபுரம்–உடுமலை சாலையில் உள்ள சுமார் 54 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில், பொதுக்கூட்டத்துக்கான பிரமாண்ட மேடை மற்றும் செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுமார் ஒரு லட்சம் பேர் வந்து செல்லும் வகையில், பொதுமக்கள் அமரும் பகுதி, மேடை, தடுப்புகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், பொதுக்கூட்டம் நடைபெற உள்ள அதே பகுதியில் ஏற்கனவே 3 ஹெலிகாப்டர் இறங்குதளங்கள் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் அருகே உள்ள ஒரு ரிசார்ட் வளாகத்திலும் ஹெலிகாப்டர் இறங்குவதற்கான தளம் ஒன்று இருப்பதாகவும், தற்போது அந்த பகுதி சுத்தம் செய்யப்பட்டு, பெயிண்டிங் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவைக்கு வரும் விஜய், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் வந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், அவரது பயணத் திட்டம் மற்றும் ஹெலிகாப்டர் தரையிறங்கும் இடம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
விஜய் ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் வர உள்ளதாக தகவல் பரவியுள்ள நிலையில், ஹெலிகாப்டர் இறங்குதளங்கள் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிகளில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், பொதுக்கூட்டத்தில் அதிகளவில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளதால், போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பணிகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படும் இந்த பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமடைந்துள்ளதால், தாராபுரம்–உடுமலை சாலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN