Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத், 24 செப்டம்பர் (ஹி.ச.)
ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீசைலத்திற்கு 38 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் டிராவல்ஸ் பேருந்து, இன்று அதிகாலை கர்மங்காட் ஆஞ்சநேயர் கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்தின் பின்பகுதியில் இருந்து புகை வெளியேறியுள்ளது.
இதை கவனித்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை சாலையோரம் நிறுத்தி அனைத்து பயணிகளையும் பாதுகாப்பாக கீழே இறக்கியுள்ளார்.
சில நிமிடங்களில் தீ மளமளவென பரவி பேருந்து முழுவதும் பற்றி எரிய தொடங்கியது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், பேருந்து முழுமையாக எரிந்து சேதமடைந்தது.
இது குறித்து தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில்,
கர்மங்காட் ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று தீப்பிடித்தது. அதில் 38 பயணிகள் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். பேருந்து ஸ்ரீசைலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதிகாலை 2.15 மணிக்கு எங்களுக்கு தகவல் கிடைத்தது என்று தெரிவித்தார்.
ஓட்டுநரின் சமயோசித செயலால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேருந்தின் பராமரிப்பு மற்றும் மின் இணைப்புகளில் ஏதேனும் கோளாறு இருந்ததா என்பது குறித்து விரிவான விசாரணைக்கு பிறகே தீ விபத்திற்கான சரியான காரணம் தெரியவரும்.
Hindusthan Samachar / vidya.b