Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.)
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ரூ.1,020 கோடி மதிப்பிலான ஒப்பந்த முறைகேடு மற்றும் ஊழல் புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையான DVAC அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் முக்கிய புள்ளியாக கருதப்படும் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.ரவிச்சந்திரனின் உதவியாளர் கவி பிரசாத்துடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் DVAC அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அமலாக்கத் துறை வழங்கிய முக்கிய ஆவணங்கள், கைப்பேசி உரையாடல்கள் மற்றும் வாட்ஸ்அப் தகவல்கள் உள்ளிட்டவை முக்கிய ஆதாரங்களாக சிக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் வழக்கு விசாரணை தீவிரமடைந்து வருவதால், கவி பிரசாத் வெளிநாட்டிற்கோ அல்லது வெளி மாநிலத்திற்கோ தப்பிச் செல்லக் கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அவருக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் (Look Out Notice) பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், லண்டன் செல்வதற்காக சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த கவி பிரசாத்தை, குடியுரிமை மற்றும் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் வழக்கமான ஆவண சரிபார்ப்பின் போது தடுத்து நிறுத்தினர். அவரது பெயரில் லுக் அவுட் நோட்டீஸ் இருப்பது அப்போது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை லண்டன் செல்ல அனுமதிக்காமல் அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.
இதையடுத்து தகவலறிந்து வந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீசார் கவி பிரசாத்தை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / vidya.b