Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 24 செப்டம்பர் (ஹி.ச.)
மதுரை மேலூரைச் சேர்ந்த சாந்தகுமார், FQL ஆப் மூலம் நடைபெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் FQL ஆப்பில் ரூ.1,000 கோடிக்கும் மேல் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், இதில் பெரும்பாலானோர் பெண்கள், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர், கூலித் தொழிலாளர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், கிரிப்டோகரன்சி, அமெரிக்க டாலர் உள்ளிட்ட சர்வதேச பணப் பரிவர்த்தனைகளுடன் இந்த மோசடிக்கு தொடர்பு இருப்பதாகவும், இணையம் வாயிலாக மோசடி நடைபெற்றுள்ளதால் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், மனுதாரரும் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவர் பொதுநல வழக்காக இந்த மனுவைத் தொடர முடியாது என்றும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர்களின் கருத்தைக் கேட்காமல் வழக்கை சிபிஐக்கு மாற்ற முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்களையும் வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்க மனுதாரருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam