ஜெம் வீரமணி வழக்கில் மேலும் 3 காவல் அதிகாரிகளுக்கு சம்மன்
சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.) ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், அப்போது வழக்கை விசாரித்த காவல் அதிகாரிகள் 3 பேருக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள
Veer


சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.)

ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், அப்போது வழக்கை விசாரித்த காவல் அதிகாரிகள் 3 பேருக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புகார் பெறப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், பின்னர் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதற்கான காரணம் என்ன? வழக்கை முடித்து வைக்க யாருடைய நிர்பந்தம் இருந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் பெறும் வகையில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அப்போது விசாரணை மேற்கொண்ட விபச்சார தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் மகேஷ் குமார், காவல் ஆய்வாளர் ராஜலட்சுமி மற்றும் உதவி ஆணையர் யாஸ்மின் ஆகியோருக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒரு காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆணையர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், விபச்சார தடுப்பு பிரிவைச் சேர்ந்த மற்றொரு காவல் ஆய்வாளரான ராஜலட்சுமி இந்த வழக்கில் விசாரணைக்குள் வந்தது ஏன்? அவருக்கு வழங்கப்பட்ட பொறுப்பு என்ன? என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும், வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணை, சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், வழக்கை மேல்விசாரணைக்கு எடுத்துச் செல்லாமல் நிறுத்தியதற்கான காரணங்கள் உள்ளிட்டவை தொடர்பாகவும் அதிகாரிகளிடம் விளக்கம் பெறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, காவல் ஆய்வாளர் ராஜலட்சுமி மீது ஏற்கனவே லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், அந்த வழக்கின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.

ஜெம் வீரமணி வழக்கில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் தற்போது வழக்கு மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டதற்கான பின்னணி குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படுவதால், இந்த விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ