Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.)
சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹம் ஆகிய இருவரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சாந்தி, மகேந்திர சிம்ஹம் மற்றும் வீரமணியின் உதவியாளர் கணேசன் ஆகியோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹம் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், இந்த வழக்கில் இதுவரை எத்தனை சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், எத்தனை நாட்களாகவும் எவ்வாறு குற்றச் செயல்கள் நடைபெற்றுள்ளன, மேலும் இந்த விவகாரத்தில் வேறு யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹம் ஆகிய இருவரையும் போலீசார் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த உள்ளனர்.
நீதிபதி பத்மா முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P