ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கு- சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஜாமீன் மனுக்களுக்கு போலீஸ் பதிலளிக்க உத்தரவு
சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.) ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிலளிக்க சென்னை போக்சோ சிறப்
Judgement


சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.)

ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிலளிக்க சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுக்களில், தங்களை ஆகஸ்ட் 28ஆம் தேதி கைது செய்த போலீசார், மறுநாள் ஆகஸ்ட் 29ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்ததாக தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, சுமார் 6 ஆண்டுகள் கழித்து 2025ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி இந்திய குழந்தைகள் நல அமைப்பு புகார் அளித்ததாகவும், அதன் அடிப்படையில் அக்டோபர் 7ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. புகார் அளிப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்கு உரிய விளக்கம் அளிக்கப்படாததால், வழக்கின் அடிப்படை குறித்து சந்தேகம் எழுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் எந்த குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என்றும், புகார் அளித்தவர் பாதிக்கப்பட்ட சிறுமியோ, அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரோ அல்ல என்றும் மனுதாரர்கள் கூறியுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் எந்த சிறுமியும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வழக்கில் காவல் துறையினரே முக்கிய சாட்சிகளாக இருப்பதாகவும், அவர்களின் வாக்குமூலங்கள் ஏற்கனவே காவல் துறை வசம் உள்ளதால், ஜாமீனில் வெளியே வந்தால் சாட்சியங்களை கலைக்கவோ, விசாரணையை பாதிக்கவோ வாய்ப்பில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குப் பிறகே தங்களை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்ததாகவும் மனுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கைது செய்யப்பட்டு மூன்று வாரங்களை நெருங்கியுள்ள நிலையில், தங்களை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி இதுவரை காவல் துறை தரப்பில் எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வழக்கில் தேவையான ஆதாரங்கள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுவிட்ட நிலையில், தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என இருவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஜாமீன் மனுக்கள் நீதிபதி பத்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில், வழக்கில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிகளின் விவரங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், மனுதாரர்களை நீதிமன்றக் காவலில் அடைப்பதில் எந்தத் தாமதமும் ஏற்படவில்லை என்றும், அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்படியே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இருவரின் ஜாமீன் மனுக்கள் தொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்ய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு அவகாசம் வழங்கிய நீதிபதி, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P