ஹேம்குண்ட் சாகிப்பில் வரலாற்று சாதனை - 3.4 லட்சம் பக்தர்கள் தரிசனம்
உத்தராகண்ட், 24 செப்டம்பர் (ஹி.ச.) ஹேம்குண்ட் சாகிப் என்பது இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில், இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சீக்கிய புனித வழிபாட்டுத் தலமாகும் (குருத்வாரா). கடல் மட்டத்திலிருந்து சுமார்
ஹேம்குண்ட் சாகிப்பில் வரலாற்று சாதனை - 3.4 லட்சம் பக்தர்கள் தரிசனம்


உத்தராகண்ட், 24 செப்டம்பர் (ஹி.ச.)

ஹேம்குண்ட் சாகிப் என்பது இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில், இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சீக்கிய புனித வழிபாட்டுத் தலமாகும் (குருத்வாரா). கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,572 மீட்டர் (15,000 அடிகள்) உயரத்தில் அமைந்துள்ள இது, உலகின் மிக உயர்ந்த குருத்வாராக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

பத்ரிநாத் தாமிலும் இந்த ஆண்டு வரலாற்று சாதனை பதிவாகியுள்ளது. அங்கு முதல் முறையாக பக்தர்கள் எண்ணிக்கை 17 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

மேலும் இந்த ஆண்டு ஹேம்குண்ட் சாகிப் யாத்திரையில் பக்தர்கள் வருகை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது. இதுவரை சுமார் 3,40,000 பக்தர்கள் சீக்கிய புனிதத் தலத்தில் தரிசனம் செய்துள்ளதாக கார்வால் ஆணையர் ஆனந்த் ஸ்வரூப் அறிவித்துள்ளார்.

யாத்திரை காலம் முடிவடைய இன்னும் 17 நாட்கள் உள்ள நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் ஆனந்த் ஸ்வரூப்,

கடந்த சில ஆண்டுகளாக ஹேம்குண்ட் சாகிப்புக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த ஆண்டு 2,74,000 பக்தர்கள் வருகை தந்திருந்த நிலையில், நடப்பு ஆண்டில் யாத்திரை முடிவடைய ஒன்றரை மாதம் இருக்கும் நிலையிலேயே 3,40,000 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

எஞ்சியுள்ள யாத்திரை காலத்தில் மேலும் 50,000 முதல் 60,000 பக்தர்கள் வரக்கூடும். இந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப் போகிறது என்று நான் நம்புகிறேன்.

பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்வதற்கும், யாத்திரையை சுமுகமாக நடத்துவதற்கும் தேவையான ஏற்பாடுகளை நிர்வாகம் தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றது.

இதற்கிடையே, விரைவில் நடைபெற உள்ள ஹரித்வார் கும்பமேளாவுக்கான தயாரிப்பு பணிகள் துரித கதியில் முன்னேறி வருகின்றன. கும்பமேளா அமைதியாகவும், பக்தர்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி நடைபெறுவதை உறுதி செய்ய, உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மை மற்றும் கூட்ட நெரிசல் கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகின்றது.

நிரந்தர கட்டுமானம் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. பல பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்காலிக பணிகளுக்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது. களப்பணிகள் விரைவில் தொடங்கும்.

சமீபத்தில் ஹரித்வாரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் நாட்களில் மீண்டும் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து துறைகளும் பணிகளை விரைவாகவும், குறித்த காலத்திற்குள், உயர்ந்த தரத்துடனும் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன. ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வாரில் உள்ள படித்துறைகளில் வசதிகளை வலுப்படுத்துவதோடு, பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் கூட்ட மேலாண்மை நடவடிக்கைகளை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Hindusthan Samachar / vidya.b