Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் தமிழ் – ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையே தொடரும் என்றும், ஹிந்தித் திணிப்பை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
உச்சநீதிமன்ற நீதிபதிகளும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டவர்களே தவிர, அதற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சட்டங்களை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு உள்ள நிலையில், நீதிமன்றங்கள் புதிதாக சட்டம் இயற்றும் அதிகாரத்தை தங்களது கைகளில் எடுத்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியா ஒரு கூட்டாட்சி நாடு என்றும், மாநிலங்கள் ஒன்றிய அரசிடம் கப்பம் செலுத்தும் சிற்றரசுகள் அல்ல என்றும் கி.வீரமணி குறிப்பிட்டுள்ளார்.
நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என்றும், அதற்கான நிலங்களைத் தேட மூன்று மாத காலக்கெடு விதித்துள்ளதாகவும் கூறி, இது சட்டப்படி எவ்வாறு சரியாகும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
1967ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கை நடைமுறையில் இருப்பதாகவும், கடந்த 59 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு ஆட்சிகள் மாறினாலும் அந்தக் கொள்கை தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் இருப்பதால், மாநிலங்களின் கல்விக் கொள்கையில் ஹிந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் கி.வீரமணி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ