Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம் , 24 செப்டம்பர் (ஹி.ச.)
சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த தமிழக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்க கிரீடம் மாயமாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அசல் தங்க கிரீடத்துக்கு பதிலாக அதே வடிவம் மற்றும் அளவில் போலி கிரீடம் வைக்கப்பட்டிருப்பது கணக்கெடுப்பின்போது கண்டுபிடிக்கப்பட்டது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு நாடு முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.
வேண்டுதல்கள் நிறைவேறியதும் பக்தர்கள் தங்கம் உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக வழங்குவது வழக்கம்.
அந்த வகையில், கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் 55.72 சவரன் (445.76 கிராம்) எடையுள்ள தங்க கிரீடத்தை சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளனர். இந்த காணிக்கை கோவில் பதிவேட்டிலும் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சபரிமலை சன்னிதானத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த திருவாபரணங்களின் கணக்கெடுப்பு மற்றும் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
நீதிபதி கே.டி.சங்கரன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டபோது, 55.72 சவரன் எடையுள்ள தங்க கிரீடத்துக்கு பதிலாக போலி கிரீடம் இருப்பது தெரியவந்தது.
பாதுகாப்பு அறையில் இருந்த கிரீடம் அசல் கிரீடத்தின் அதே வடிவம் மற்றும் அளவில் இருந்தாலும், அது தங்கத்தால் செய்யப்பட்ட அசல் கிரீடம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
மேலும், அதில் வைரங்களைப் போன்ற வெள்ளை நிற கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. காணிக்கையாக வழங்கப்பட்ட அசல் கிரீடத்தின் எடையைவிட தற்போது பாதுகாப்பு அறையில் இருக்கும் கிரீடத்தின் எடையும் குறைவாக இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால், அசல் தங்க கிரீடத்தை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக போலி கிரீடத்தை வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பாதுகாப்பு அறையில் சி.சி.டி.வி. கேமரா கண்காணிப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. அசல் கிரீடம் எப்போது மாயமானது, அதை யார் எடுத்துச் சென்றது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
ஏற்கனவே சபரிமலையில் துவாரபாலகர் சிலைகளில் தங்கம் மாயமானதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தமிழக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்க கிரீடம் மாயமான சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA