ரூ 10.25 கோடி மதிப்பில் புதுப்பொலிவு பெற்ற மதுரை காந்தி அருங்காட்சியகம் - செப்.28-ல் முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார்
மதுரை, 24 செப்டம்பர் (ஹி.ச.) இந்தியாவில் உள்ள ஐந்து காந்தி அருங்காட்சியகங்களில் ஒன்றான மதுரை அருங்காட்சியகம், 17-ஆம் நூற்றாண்டில் ராணி மங்கம்மாளால் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அரண்மனையில் செயல்பட்டு வருகிறது. காந்தியடிகள் பயன்படுத்திய ரத்
ரூ 10.25 கோடி மதிப்பில் புதுப்பொலிவு பெற்ற மதுரை காந்தி அருங்காட்சியகம் - செப்.28-ல் முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார்


மதுரை, 24 செப்டம்பர் (ஹி.ச.)

இந்தியாவில் உள்ள ஐந்து காந்தி அருங்காட்சியகங்களில் ஒன்றான மதுரை அருங்காட்சியகம், 17-ஆம் நூற்றாண்டில் ராணி மங்கம்மாளால் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அரண்மனையில் செயல்பட்டு வருகிறது.

காந்தியடிகள் பயன்படுத்திய ரத்தக்கறை படிந்த ஆடை உட்பட 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய பொருட்கள், புகைப்படங்கள் மற்றும் கடிதங்கள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

நீண்ட காலமாக பராமரிப்பின்றி இருந்த கட்டடம் மற்றும் காட்சிக் கூடங்களை நவீன தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்க தமிழக அரசு நிதி ஒதுக்கியது.

புனரமைப்புப் பணிகளின் ஒரு பகுதியாக, காட்சிக் கூடங்கள் குளிரூட்டப்பட்ட வசதியுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. பார்வையாளர்களுக்கு காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எளிதில் புரிய வைக்கும் வகையில் டிஜிட்டல் திரைகள், ஒளி-ஒலி காட்சிகள் மற்றும் நவீன விளக்கு அலங்காரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாணவர்கள் பயன்பெறும் வகையில் பிரத்யேக நூலகம் மற்றும் கருத்தரங்கக் கூடமும் சீரமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சுதந்திரப் போராட்ட வரலாற்றின் உயிர் சாட்சியாக விளங்கும் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம், சுமார் 10.25 கோடி ரூபாய் செலவில் முழுமையாக புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் தயாராகியுள்ளது.

இந்த புனரமைக்கப்பட்ட அருங்காட்சியகத்தை வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் விஜய் திறந்து வைக்க உள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், விழா மேடை அமைக்கும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. அருங்காட்சியக வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பார்வையாளர்களை வரவேற்க காத்திருக்கிறது.

Hindusthan Samachar / vidya.b