Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச)
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து முன்வைத்து வரும் ‘வாக்குத் திருட்டு’ மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து,
‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் புலனாய்வு புதிய தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தலைமைத் தேர்தல் ஆணையரைத் தவிர தேர்தல் ஆணையத்தில் இடம்பெற்றுள்ள சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இரு தேர்தல் ஆணையர்களும் கடந்த 10 மாதங்களில் மட்டும் 14 முறை எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனைகளை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர்களின் ஆட்சேபனைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டதாகவும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதாகவும் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில், புதிய வாக்காளர்களை பதிவு செய்வதற்கான படிவம்-6-ல் விதிமுறைகளுக்கு மாறாக மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும், இதனால் லட்சக்கணக்கான இளம் வாக்காளர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
படிவம்-6-ல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் சட்டவிரோதமானவை என இரு தேர்தல் ஆணையர்களும் எச்சரித்ததாகவும், இருப்பினும் அந்த நடவடிக்கைகள் தொடர்ந்ததாகவும் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
மேலும், டெல்லியில் உள்ள தகவல் தொழில்நுட்பப் பிரிவு மென்பொருள் செயல்பாடுகளில் தலையிட்டு, களத்தில் பணியாற்றும் தேர்தல் பதிவு அலுவலர்களின் அதிகாரங்களை கட்டுப்படுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதன் மூலம் வாக்காளர் பட்டியல் தொடர்பான தரவுத்தளத்தை முறைகேடாக கையாளும் முயற்சி நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையர்களே மத்திய அமைச்சரவைச் செயலாளரிடம் முறையிடும் அளவுக்கு நிலைமை சென்றதாகவும் மாணிக்கம் தாக்கூர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வாக்குரிமை என்பது மக்களின் அரசியலமைப்புச் சட்ட உரிமை என்றும், அந்த உரிமையைப் பாதுகாப்பதே ஜனநாயகத்தின் அடிப்படைக் கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின் 324-வது பிரிவு வழங்கியுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் தேர்தல் நடைமுறைகள் நடைபெற வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் மாணிக்கம் தாக்கூர் வலியுறுத்தியுள்ளார்.
ராகுல் காந்தி தொடர்ந்து எழுப்பி வரும் ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டுகளுக்கு இந்த புலனாய்வு தகவல்கள் வலு சேர்ப்பதாகவும், வாக்குரிமையைப் பாதுகாக்கும் நோக்கில் அவர் நடத்தி வரும் மக்கள் சந்திப்புகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெறும் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ